ஸ்ரீ முத்துகிருஷ்ண சுவாமிகள்

ஸ்ரீ முத்துகிருஷ்ண சுவாமிகள், திருநெல்வேலி மாவட்டம், வள்ளியூர் பொதிகைமலைத்தொடர் பொத்தை மலையடிவாரம் சாமியார் பொத்தையில் 19ம் நூற்றாண்டில் சுமார் 179 வருடங்கள் வாழ்ந்த ஜீவன் முக்தராவார். ஸ்ரீ அகஸ்திய மஹரிஷியின் அம்ஸாவதாரமான சுவாமிகள் ஓதாமல் உணர்ந்த, பிறவியற்ற சாமுசித்தராவார். ஸ்ரீ சுவாமிகள், ஸ்ரீ அகஸ்திய மஹரிஷியின் அம்ஸாவதாரமென்று பல ரிஷி நாடிகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. சுவாமிகள் இவ்வுலகில் வாழ்ந்த காலத்தில் தன்னை புகைப்படம் எடுக்க அனுமதித்ததில்லை. சுவாமிகளின் அருள்வாக்கின்படி பக்தர்கள் ஸ்ரீ அகஸ்திய மஹரிஷியின் சிலா ரூபத்தையே வைத்து சுவாமிகளாக வழிபடுகின்றனர். நாடி வரும் பக்தர்களுக்கு அருள் மழை பொழிந்து அவர்தம் குறைகளைத் தீர்ப்பது சுவாமிகளின் வழக்கமாகும். சுவாமிகள் வாழ்ந்த காலத்தில் தினம் பொத்தை மலையேறி, திருச்செந்தூர் சாயரக்ஷை தரிசனம் செய்வதும், வருடத்திற்கு ஒரு முறை திருக்கார்த்திகை தோறும் பொத்தை மலைச் சிகரத்தில் தீபம் ஏற்றுவதும் வழக்கமாகும். சுவாமிகள் அன்ன ஆகாரமின்றி, காயகல்ப சித்தியை அடைந்த சித்தராவார்.

சுவாமிகள் ஸ்தூல உடலில் வாழ்ந்த காலத்திலேயே சாமியார் பொத்தையில் ஆலயம் வரும், பொத்தை மலையைச் சுற்றித் தேரோடும், அருகே ஆறோடும் என்று தனது அடியார்களிடம் கூறியுள்ளார். அதைக் கேட்கும் பாக்கியம் பெற்றவர்களுள், ஸ்ரீ முத்துகிருஷ்ண சுவாமி மிஷன், அறக்கட்டளை ஸ்தாபகர் தெய்வத்திரு மாணிக்கவாசகம் பிள்ளையவர்களின் அன்னையும் ஒருவராவார். இவ்வாறு பல அருட்செயல்களை ஆற்றிய ஸ்ரீ முத்துகிருஷ்ண சுவாமிகள் 1913ம் ஆண்டு கார்த்திகை மாதம் வளர்பிறை ஏகாதசி திதியன்று ஜீவ சமாதியில் அமர்ந்தார்.

சுவாசத்தை அடக்கி ஜீவசமாதியில் அமர்ந்த சற்குரு ஸ்ரீ முத்துகிருஷ்ண சுவாமிகள் ஸ்தூலமாக இருக்கும்போது தான் சொன்னதை, தானே இன்றும் பூஜ்யஸ்ரீ மாதாஜி வித்தம்மா மூலமாக செயலாற்றிக் கொண்டிருக்கின்றார்.

சுவாமிகள் வாழ்ந்த காலத்தில், அவரை தரிசித்து அவருடைய பரிபூரண அநுக்கிரகத்தைப் பெற்றவரும், ஸ்ரீ முத்துகிருஷ்ண சுவாமி மிஷனின் ஸ்தாபகருமான தெய்வத்திரு மாணிக்கவாசகம் பிள்ளையவர்களின் தவப் புதல்வியே பூஜ்யஸ்ரீ மாதாஜி வித்தமாவாகும்.

தெய்வத்திரு க.மாணிக்கவாசகம் பிள்ளை

தெய்வத்திரு மாணிக்கவாசகம் பிள்ளையவர்கள், ராதாபுரம் திரு. கல்யாணசுந்தரம் பிள்ளையவர்களுக்கும் ஆன்மீக உணர்வுமிக்க திருமதி சுப்பம்மாள் அம்மையாருக்கும் 1906ம் ஆண்டு ஜனவரி மாதம் 30ம் திகதியன்று அருந்தவப் புதல்வனாக பிறந்தார். ஸ்ரீ முத்துகிருஷ்ண சுவாமிகளின் பக்தையான அன்னை சுப்பம்மாள் தன் மைந்தனுக்கு குருவருளைக் கூட்டுவிக்கும் முகமாக சற்குரு ஸ்ரீ முத்துகிருஷ்ண சுவாமிகளிடம் அழைத்துச் செல்வது வழக்கமாகும். பிள்ளையவர்கள் தனது சிறுவயதில் சற்குருநாதர் ஸ்ரீ முத்துகிருஷ்ண சுவாமிகளின் நயன தீட்சை, ஸ்பரிச தீட்சை, அருட் பிரசாதம் அனைத்தும் கிடைக்கப்பெற்ற பெரும் புண்ணியவானாகும். தொடர்ந்தும் பிள்ளையவர்களுடைய தெய்வீக புதல்வி பூஜ்யஸ்ரீ மாதாஜி வித்தம்மா மூலமாக சற்குருநாதரின் அநுக்ரஹம் அவருக்குக் கிட்டிக்கொண்டிருந்தத்து. சுவாமிகளின் அருள்வாக்கின் படியே பிள்ளையவர்களின் வாழ்க்கையில் அனைத்து நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.

சற்குருநாதர் ஆணையிடும் காரியங்களை செய்வதற்காக தனது தவப்புதல்வி பூஜ்யஸ்ரீ மாதாஜி வித்தம்மா அவர்களை தலைவியாக்கி ஸ்ரீ முத்துகிருஷ்ண சுவாமி மிஷன் என்ற அறக்கட்டளையை 1969ம் ஆண்டு நிறுவினார். அதன் மூலம் சற்குரு நாதர் ஆணைகளை நிறைவேற்றி வந்தார். வருடம்தோறும் தவறாமல் சற்குருநாதரின் குருபூஜையைப் பெருவிழாவாக ஸ்ரீ முத்துகிருஷ்ண சுவாமி மிஷன் அறக்கட்டளை மூலம் செய்து வந்தார்.

குறுமுனியின் அவதாரமான சற்குருநாதர் ஸ்ரீ முத்துகிருஷ்ண சுவாமியவர்களின் குருவருளை அகிலத்து மக்களனைவரும் அனுபவிப்பதற்கு வழி வகைகளை வகுத்து அஸ்திவாரமிட்டு மாணிக்கவாசகம் பிள்ளையவர்கள் 1989ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 24ம் திகதி குருநாதரின் திருவடியை எய்தினார். இன்று அவரது கனவுகள் அனைத்தையும் அவரது தவப்புதல்வியும் ஸ்ரீ முத்துகிருஷ்ண சுவாமி மிஷனின் தலைவியுமான பூஜ்யஸ்ரீ மாதாஜி வித்தம்மா அவர்கள் நனவாக்கிக் கொண்டிருக்கிருக்கின்றார்கள்.

பூஜ்யஸ்ரீ மாதாஜி வித்தம்மா

ஸ்ரீ முத்துகிருஷ்ண சுவாமி மிஷன் அறக்கட்டளையின் தலைவியும் எம்மை வழிநடத்தும் அன்னையுமான பூஜ்யஸ்ரீ மாதாஜி வித்தம்மா அவர்கள் ஸ்ரீ முத்துகிருஷ்ண சுவாமி மிஷன் அறக்கட்டளையை ஸ்தாபித்த தெய்வத்திரு மாணிக்கவாசகம் பிள்ளையவர்களின் தவப்புதல்வியாவார். பூஜ்யஸ்ரீ மாதாஜி வித்தம்மா ஸ்ரீ முத்துகிருஷ்ண சுவாமிகளின் பரிபூரண கடாக்ஷத்திற்குப் பாத்திரமாகி சுவாமியவர்களின் ஆணைகளை ஈர்த்தெடுத்து ஸ்ரீ முத்துகிருஷ்ண சுவாமி மிஷன் அறக்கட்டளை மூலமாக தந்தையாற்றி வந்த அனைத்து சேவைகளோடு மற்றும் பல சேவைகளையும் தொடர்ந்து செய்து வருகின்றார்.

பள்ளிக்கூட வாசனையே இல்லாமல் வீட்டுக்குள்ளேயே குடத்துவிளக்காக ஒளிர்ந்து வந்த மாதாஜி அவர்கள், இன்று குன்றின் மேல் தீபமாக தன்னை நாடி வருவோரிடம் சரளமாக தமிழிலும், ஆங்கிலத்திலும் பேசி குறை தீர்த்து குருவருளால் சித்தவைத்தியமும் அருளி வருகின்றார். ஸ்ரீ முத்துகிருஷ்ண சுவாமிகளின் அருளினால் பூஜ்யஸ்ரீ மாதாஜி வித்தம்மா அவர்களின் வழிநடத்துதலில் ஸ்ரீ பொத்தை க்ஷேத்திரத்தில் தொண்டர்கள் பல சேவைகளை செயலாற்றி வருகின்றனர்.

ஸ்ரீ முத்துகிருஷ்ண ஸ்வாமி மிஷன்

குருவின் க்ஷேத்திரமான ஸ்ரீ பொத்தையில் ஸ்ரீ முத்துகிருஷ்ண சுவாமி மிஷன் அறக்கட்டளை பல செயற்கரிய சேவைகளைச் செய்து வருகின்றது. அவையாவன – பசிப்பிணியைப் போக்கும் நித்திய அன்னதானம், இலவசகுடிநீர், உடற்பிணியைப் போக்கும் இலவச மருத்துவ சேவை, அறிவை வளர்க்கும் இலவசக்கல்வி, பண்பாட்டை வளர்க்கும் லலிதகலைகளை இலவசமாகப் பயிற்றுவித்தல் போன்ற பலப்பல சேவைகளாகும்.

சமீபத்தில் 2008ம் ஆண்டு நமக்கு நாமே திட்டத்தின் கீழ் அரசாங்கத்துடன் இணைந்து ஸ்ரீ பொத்தை மலையைச் சுற்றி ரதவீதியை அமைத்துள்ளது மிகப்பெரிய சேவையாகும். இந்த ரதவீதியானது ஸ்ரீ பொத்தை மலையைச் சுற்றியுள்ள பொன்னாங்குறிச்சி, மீனாட்சிபுரம், தளபதி சமுத்திரம், வள்ளியூர், கேசவனேரி, மின்சாரவாரிய காலனி, அண்ணாநகர், ராஜபுத்தூர், திருக்குறுங்குடி, ஏர்வாடி, தளவாய்புரம், நம்பித்தலைவன் பட்டயம் ஆகிய கிராமங்களை இணைக்கும் மையப்பாதையாக அமையும், இதனால் போக்குவரத்து இலகுவாக்கப்படுவதோடு மட்டுமல்லாமல் அக்கிராமத்து மக்களின் பொருளாதார வளர்ச்சியிலும் எழுச்சி காணப்படும். ஸ்ரீ முத்துகிருஷ்ண சுவாமி மிஷன் 7-12-2008ம் திகதியன்று சற்குருநாதரின் தேர்த்திருவிழாவை மலையைச் சுற்றிய ரதவீதியில் மகோன்னதமாக நடத்தியது குறிப்பிடத்தக்கது. அதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

மிஷனின் எதிர்கால திட்டங்கள்

  • சற்குருநாதர் ஸ்ரீ முத்துகிருஷ்ண சுவாமிகள் வழிபட்ட முறையில் வருடம் தோறும் திருக்கார்த்திகையன்று ஸ்ரீ பொத்தை மலைமீது விதிமுறைப்படி தீபமேற்ற வழிவகுத்தல்.
  • ஸ்ரீ பொத்தை மலையைச் சுற்றியுள்ள கிராமங்கள் ஒவ்வொன்றிலும் கூட்டுறவு பண்ணைகள் மூலம் ரசாயனக் கலவையற்ற கனிப்பொருள் எரிவாயுவை உற்பத்தி செய்தல்.
  • ஸ்ரீ வித்யா மந்திர் இலவசக் கல்வியின் கிளைகள் ஸ்ரீ பொத்தை ஷேத்திரத்தைச் சுற்றியுள்ள ஒவ்வொரு கிராமத்திலும் நிறுவப்பட்டு உயர்கல்வியைக் கற்றுத்தருதல்.
  • ஒவ்வொரு கிராமத்திலும் நமது கலாச்சாரத்தைக் காப்பாற்றும் லலித கலைகளை விரிவாக்குதல்.
  • இராசாயனக் கலவையற்ற இயற்கை வேளாண் செயல் திட்டங்களை ஏற்படுத்துவதன் மூலம் கிராமங்களில் கமத்தொழிலை மேம்படுத்தி சிறந்த உணவு பொருட்கள் மக்களைச் சென்று அடையச்செய்தல். அதன் மூலம் இன்று இரசாயனக் கலவையால் பெருகிவரும் பயங்கர நோய்களிலிருந்து மக்களைக் காப்பாற்றுதல்.



உலகப் பொது பிரார்த்தனை


வணங்குவதற்குரிய இரக்கமும், அன்பும் கொண்ட இறைவா!
உமது அடி பணிந்து வணங்குகிறோம்.
நீரே ஸச்சிதானந்த மெய்ப்பொருள்
எங்கும் நிறைந்து எல்லாம் வல்லவராய் யாவும் அறிந்தவர் நீரே
உயிர்கள் யாவிலும் உறைபவர் நீரே


பரந்த உள்ளமும் சம நோக்கும் நடுநிலையும் நம்பிக்கையும்
பக்தியும் ஞானமும் எங்களுக்கு நல்குவீராக
உள்ளத்தே ஆன்மீக ஆற்றலைத் தந்து
தீய வேட்கைகளை எதிர்க்கவும் மனதை வெல்லவும் அருள்வீராக
ஆணவம், காமம், துராசை, வெறுப்பு, கோபம், பொறாமை
இவற்றிலிருந்து எங்களை விடுவீப்பீராக.
தெய்வீக இயல்புகளை எங்கள் இதயத்தில் நிரப்புவீராக


நாங்கள் காணும் எந்தப் பெயர்களிலும் உருவங்களிலும் உம்மையே
(காண்போமாக)
எந்தப் பெயர்களிலும், உருவங்களிலும் நாங்கள் உமக்குச் சேவை புரிவோமாக

எப்போதும் உம்மையே நினைவிற்கொள்வோமாக
உமது புகழையே என்றும் பாடுவோமாக
உமது நாமமே எங்கள் உதடுகளில் ஒலிக்கட்டும்
உம்மிடமே நாங்கள் உறுதியுடன் என்றென்றும் நிலை பெறுவோம்

- சுவாமி சிவானந்தா